இலங்கை செம்மணி-I
பல
தசாப்தங்களாக நீடிக்கும் வலிமிகுந்த தேடல்களுக்கும், பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கும் மத்தியில், யாழ்ப்பாணம் செம்மணிப்
பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி (
chemmani mass graves), இலங்கையின்
இருண்ட கடந்த காலத்தின் ரணங்களை மீண்டும் கீறியுள்ளது. 2025, பிப்ரவரி மாதம், யாழ்ப்பாணம், செம்மணி இந்து மயானப்
பகுதியில் புதிய கட்டடம் ஒன்று கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது, எதிர்பாராத விதமாக
மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. இந்த ஆரம்பகட்ட கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, சட்டரீதியான அனுமதியுடன்
மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வாய்வுகளில்,
இதுவரை குழந்தைகள் உட்பட 65க்கும் மேற்பட்டோரின்
எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது,
ஒட்டுமொத்த தேசத்தையும், தமிழினத்தையும், அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
பல
ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அலையும் ஆயிரக்கணக்கான தமிழ்
குடும்பங்களுக்கு, இந்தப்
புதைகுழி வெறும் எலும்புக் குவியல் அல்ல;
அது அவர்களுடைய உறவுகளின் கதையாக இருக்கலாம் என்ற
அச்சத்தையும், ஒருவேளை
மூடுண்டிருந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என்ற நம்பிக்கையையும் ஒருசேரக்
கொடுத்துள்ளது.
இலங்கை தந்திரம்
இந்தக்
கண்டுபிடிப்பு நிகழ்ந்த உடனேயே, காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித
உரிமை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் சம்பவ இடத்தில் கூடி, இந்தப் புதைகுழி
அகழ்வாய்வுப் பணிகள் சர்வதேசக் கண்காணிப்புடன்,
வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று
கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் நடைமுறைகளில் தங்களுக்கு
நம்பிக்கை இல்லை என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். கடந்த
காலங்களில் இதுபோன்ற பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும், முறையான விசாரணைகள்
இன்றி அவை கிடப்பில் போடப்பட்ட கசப்பான அனுபவங்களே இதற்குக் காரணம்.
கண்டெடுக்கப்பட்ட
எலும்புக்கூடுகளில் சில, சிறிய
அளவிலான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்பது,
இங்கு புதைக்கப்பட்டவர்கள் ஆயுதப் போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் அல்ல, மாறாக
அப்பாவிப் பொதுமக்கள் என்பதற்கான வலுவான சான்றாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின்
ஆடைகள், புத்தக பைகள், விளையாட்டுப்
பொருட்கள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்திகள், துயரத்தின் ஆழத்தை
அதிகரிக்கின்றன. செம்மணி, இலங்கையின்
நீண்டகால இனப்பிரச்சினையில் நீதி வழங்கப்படாததன் ஒரு நீடித்த சின்னமாக மீண்டும்
உருவெடுத்துள்ளது. இந்த அகழ்வாய்வின் ஒவ்வொரு அசைவும், சர்வதேச சமூகத்தின்
கூர்மையான பார்வைக்கு உள்ளாகியுள்ளது.
கறுப்பு
அத்தியாயம் செம்மணியின் பெயர், கூட்டுப்
படுகொலைகளுடனும் மனிதப் புதைகுழிகளுடனும் இணைத்துப் பேசப்படுவதற்கு முக்கியக்
காரணம், 1996 ஆம் ஆண்டு நடந்தேறிய
கிருஷாந்தி குமாரசாமி என்ற மாணவியின் படுகொலைச் சம்பவம்தான். யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில்,
செம்மணி ராணுவச் சோதனைச் சாவடியில் தடுத்து
வைக்கப்பட்ட 18 வயது
மாணவியான கிருஷாந்தி, கூட்டுப்
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச்
சம்பவம், அப்போது
யாழ்ப்பாணத்தில் நிலவிய கொடூரமான சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ
உள்ளிட்ட ராணுவ வீரர்கள், விசாரணையின்
போது ஒரு அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்தனர். கிருஷாந்தியைப் போலவே, சுமார் 300 முதல் 400 வரையிலான தமிழர்கள்
கொல்லப்பட்டு, செம்மணிப்
பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாணவி
கிருஷாந்தி எலும்புக் கூடு இந்த வாக்குமூலம்,
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்
விளைவாக, 1999 ஆம் ஆண்டு சர்வதேசப்
பார்வையாளர்களின் வருகையுடன், செம்மணியில்
அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த அந்த
அகழ்வாய்வில், 15 பேருடைய
எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு உடல்கள், கிருஷாந்தியுடன்
தொடர்புடைய, காணாமல்
போன அயலவர்கள் என அடையாளம் காணப்பட்டன. ஆனால்,
வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான
உடல்கள் எங்கே என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அரசியல் தலையீடுகள், ஆதாரப் பற்றாக்குறை
மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ஆகியவற்றால் அந்த விசாரணை நீர்த்துப் போனது.

This is very painful , gruesome , and shocking
பதிலளிநீக்கு